திருப்பதியில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீசாருக்கு எஸ்பி அதிரடி உத்தரவு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு எஸ்பி அதிரடி உத்தரவிட்டார்.

திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எஸ்பி பரமேஷ்வர் தலைமையில், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டறிந்த எஸ்பி பேசியதாவது:

வழக்குப்பதிவு செய்வதில் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பியவுடன் பொறுப்பு முடிந்துவிடும் என்று நினைத்தால், அது தவறு. முழு விசாரணை நடத்தினால்தான் பொறுப்பு முடியும். நீதிமன்றத்தில் உரிய சாட்சியமளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும். நீதிமன்ற பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அதிகாரிகள் அவ்வப்போது வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் சட்ட விரோத போக்குவரத்தை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். சாராயம, கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தி திருட்டை தடுக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை தடுத்து நிறுத்தவும், பின்ஸ் ப்ரிங்கர் பிரிண்ட் கருவி மூலம் கைரேகைகளை கண்டறிந்து விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாச சேதுவின் (கருட வாரடி) பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து மற்றும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலைகளில் ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டிரம்கள் அமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும், திருவிழாக்களின் போது திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

அடிக்கடி திருட்டு நடக்கும் பகுதிகளில் பீட் சிஸ்டத்தை பலப்படுத்தி, பெண்களின் புகார்களுக்கு உடனடியாக பதில் அளித்து உரிய நேரத்தில் நீதி வழங்குவது நமது பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘திஷா’ செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பதிவிறக்கம் செய்து பயன்பெறாதவர்களாக பதிவு செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுபட்ட வழக்குகளுக்கு தீர்வு காண 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் திருப்பதி மாவட்ட காவல் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: