இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிடவில்லை... செய்திகள் அனைத்தும் கற்பனையானவை : இந்திய தூதரகம் அதிரடி!!'

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் இலங்கையின் அரசு அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1993ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அரசியல் வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யபட்டார். மக்களே வாக்களித்து அதிபரை தேர்வு செய்த நிலையில், முதல்முறையாக எம்பிக்கள் வாக்களித்து ரணில் அதிபராக தேர்வாகி உள்ளார்.  

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அதிபர் தேர்தலில் இந்தியாவின் தலையீடு குறித்தும் எழுதியிருந்தன. இதனை நேற்றே இலங்கைக்கான இந்திய தூதர அதிகாரிகள் மறுத்திருந்தனர். இன்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்து பதிவிட்டுள்ளது. அப்பதிவில், இலங்கை அதிபர் தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதாக கூறப்படுவது ஆதாரமற்றது. அதனை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் கற்பனையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் உள் விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் இந்தியா தலையிடாது என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்தியா துணை நிற்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Stories: