×

காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து தென்னையை காக்கும் வழிமுறை-வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

மன்னார்குடி : தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய வேளாண் பூச்சியியல் உதவி பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னை மரமானது இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களிலேயே மிக முக்கிய மற்றும் பயனுள்ள மரம். தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாக உள்ளது. எனவே பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருச்சம் என அழைக்கப்படுகிறது. ஆனால், தென்னை மகசூலானது பல்வேறு வகையான பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது. அவற்றுள் காண்டாமிருக வண்டானது தென்னையில் மிகுந்த சேதத்தை உண்டாக்கும் பூச்சியாகும்.

காண்டாமிருக வண்டானது கருமை நிறத்தில் காணப்படுவதால் கருவண்டு என்றும், இதன் தலையில் காண்டா மிருகத்தின் கொம்பு போன்ற சிறிய உறுப்பு ஒன்று காணப்படுவதால் காண்டாமிருக வண்டு எனவும் அழைக்கப்படு கின்றது. வண்டானது சுமார் 34 முதல் 45 மி.மீ நீளமிருக்கும். ஒரு கொம்பானது தலையின் மேற்புறத்திலிருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும்.
இவ்வண்டானது நீண்ட வட்ட வடிவ வெள்ளை முட்டைகளை எருக்குழிகளிலும், அழுகிய பொருட்களில் இடும். இளம்புழுக்கள் (கிரப்) தலை பழுப்பு நிறமாகவும், உடல் பகுதியானது அழுக்கு வெள்ளை நிறத்திலும் சுமார் 90-100 மி.மீ நீளமிருக்கும். புழுக்களானது எருக்குழிகளில் காணப்படும். வண்டின் வாழ்க்கை 4 முதல் 8 மாதங்கள் வரை நீடிக்கும்.

சேதத்தின் அறிகுறி: இது இளங்குருத்துகளை துளைத்து உட்செல்வதால் குருத்தோலை மற்றும் இளம் பூம்பாளைகள் பாதிக்கப்படுகின்றன. வண்டு துளைத்து உட்சென்று விட்ட குருத்தின் துவாரத்தில் இளம் ஓலைகளின் சக்கைப் பகுதி வெளியே தள்ளப்பட்டு காணப்படும். தாக்கப்பட்ட இலை விரிந்தவுடன் விசிறி போன்று முக்கோண வடிவில் வெட்டியது போன்று காணப்படும். சிறிய வண்டுகள் தாக்கப்பட்டால் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்கப்பட்ட மடிந்த தென்னை மரங்களை வெட்டி அழிக்க வேண்டும். தோப்புகளில் குப்பை, சாணம் ஆகியவற்றை குவித்து வைக்காமல் சுத்தமாக வைக்க வேண்டும். எருக்குழிகளை வெட்டி அதனை மண்ணால் மூட வேண்டும்.எருக்குழிகளில் காணப்படும் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். வண்டு துளைத்த துவாரங்களின் வழியே நீண்ட கம்பியை உட்செலுத்தி துவாரங்களின் வழியே உட்சென்றுவிட்ட வண்டினை கம்பியால் குத்தி வெளியே எடுக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இலை இடுக்குகளில் வேப்பங்கொட்டை தூள் மணல் (1 ்1) கலவையை இளம் மரம் ஒன்றுக்கு 150 கிராம் என்ற அளவில் அடிக்குருத்திலிருந்து மூன்றாவது குருத்தின் வழியாக இட வேண்டும். மின் விளக்கு பொறிகளை வைத்து அதன் வெளிச்சத்திற்கு கீழே விழுகின்ற ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
ஆமணக்கு பிண்ணாக்கு 2½ கிலோ ஈஸ்ட் 5 கிராம் (அ) அசிடிக் அமிலம் 5 மிலி கலவையில் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலைமட்டைத் துண்டுகளை நனைத்து ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.

மூன்று பாச்சை உருண்டைகளை சிறு துகள்களாக உடைத்து அடிக்குருத்திலிருந்து மூன்றாவது குருத்தின் வழியாக இடவேண்டும். எருக்குழியில் வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சானத்தை தெளித்து அழிக்க வேண்டும்.ஹெக்டருக்கு ஒன்று என்றளவில் ரைனோலூர் என்ற இனக்கவர்ச்சி பொறியை உபயோகித்து இவ்வண்டுகளை எளிதாக கவர்ந்து அழிக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Mannargudi : Agricultural scientists have advised on the method of controlling the rhinoceros beetle that attacks coconuts. Tamil Nadu
× RELATED சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்