நீர்மட்ட அளவுக்கு ஏற்ப கசிவுநீர் மிகத்துல்லியம் பெரியாறு அணை பலமாக உள்ளது

*ஆய்வுக்கு பின் துணைக்குழு அறிவிப்பு

கூடலூர் : பெரியாறு அணையில் நீர்மட்டத்திற்கு ஏற்ப, கசிவுநீர் மிகத்துல்லியமாக இருப்பதால், அணை பலமாக உள்ளது என அங்கு ஆய்வு செய்த துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையை கண்காணித்து, பராமரிக்க உச்சநீதிமன்றம், மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக தற்போது கொச்சியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 135.90 அடியாக உயர்ந்ததையொட்டி, அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துணை கண்காணிப்புக்குழு அணையில் நேற்று ஆய்வு செய்தது. முன்னதாக குழு தலைவர் சரவணக்குமார் தமிழக அதிகாரிகளுடன் தேக்கடி படகு துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் அணைக்குச் சென்றார். அங்கு குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, கசிவு நீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர். அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 5 மற்றும் 9வது எண் மதகுகளை இயக்கி பார்த்தனர். மதகுகளின் இயக்கம் சீராக இருந்தது.

அணை நீர்மட்டம் நேற்று 135.90 அடியாக இருந்த நிலையில் அணையின் கசிவுநீர் (சீப்பேஜ் வாட்டர்) நிமிடத்திற்கு 115.08 லிட்டராக இருந்தது. அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவுநீர் மிகத்துல்லியமாக இருப்பதால், அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: