கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் அசத்தல் குப்பைகளில் இருந்து தயாராகும் இயற்கை உரம்-விவசாயிகள் அமோக வரவேற்பு

கோத்தகிரி : கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஒன்றே முக்கால் ஏக்கரில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை தரம் பிரித்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களுக்கு விவசாயிகள் இடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக சேகரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஒன்றே முக்கால் ஏக்கரில் வளம் மீட்பு பூங்கா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னிகா தேவி காலனி பகுதியில் அமைக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு விவசாயிகளை ஈர்க்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குப்படுத்தவும் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் இயற்கை உரம் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பேரூராட்சியில் 21 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்தும் தினம் தோறும் மக்கள் பயன்படுத்திய குப்பைகள், சாலைகளில் உள்ள குப்பைகள், மார்க்கெட் பகுதிகளில் உள்ள குப்பைகள், காய்கறி கழிவுகளை கோத்தகிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரிக்கின்றனர். இதன்பின்னர். இதனை வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கின்றனர்.

இதில், மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகள் என இரு வகையாக பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு இயற்கை உரம் தயாரிப்பின்போது மக்கும் குப்பைகளை தனியாக பயன்படுத்தப்பட்டும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் உட்படுத்தப்படும். பின்னர், சலிக்கப்பட்ட உரம் தரத்திற்கு ஏற்ப மலை மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாராகும் இயற்கை உரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் செயல்பட்டு வரும் நேரு பூங்காவிலும், பேரூராட்சிக்கு சொந்தமான விளை நிலங்களிலும் காய்கறி பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி இயற்கை உரம் தயாரிப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹிம்சா திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக சிறப்பாக செயல்படுத்த ஊக்கப்படுத்துகிறார்’’ என்றனர். கோத்தகிரி பேரூராட்சி செயலாளர்கள் சதாசிவம் (பொறுப்பு), மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கூறுகையில், ‘‘திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது.

இந்த இயற்கை உரமானது தற்போது மலை மாவட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. தற்போது, 4 டன் அளவுக்கு இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது.

மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்ட விவசாயிகளிடம், இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது’’ என்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதானமாக விவசாய தொழில் உள்ளது. இதில், மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு மற்றும் சீன காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விவசாயிகள் வாங்கிச்சென்று பயன்படுத்தி, பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.4 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிலோ ஒன்று ஆரம்ப விலையாக 5 ரூபாய் தொடங்கி, உரத்தின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தை ஆர்கானிக் மாவட்டமாக மாற்ற நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவை முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடத்தில் இயற்கை உரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது, அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரத்திற்கு படிப்படியாக விவசாயிகள் மாறி வருகின்றனர். கோத்தகிரி பேரூராட்சி மூலம் குப்பைகளை கொண்டு மறுசுழற்சி செய்து உண்டாக்கப்படும் இயற்கை உரம் விவசாயிகளிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் தகவல் பரவி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் பசுமையான மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மாவட்டமாக நீலகிரி இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்கின்றனர் பசுமை ஆர்வலர்கள். கோத்தகிரி வள மீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயாரிப்பு பணிகளை முனைப்புடன் செயலாற்றுவதில், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி முக்கிய பங்காற்றி வருகிறார். இதனால் இயற்கை உரம் தயாரிப்பில் மாவட்டத்துக்கே முன்னோடி பேரூராட்சியாக கோத்தகிரி திகழ்கிறது என்பதே உண்மை.

Related Stories: