×

கொள்ளிடம் ஆற்றில் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு: சிதம்பரம் பகுதியில் பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2 ஆவது நாளாக வினாடிக்கு 1,11,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது.  வடவாற்றில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் இரண்டு நாள்களில் வீராணம் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரிகளிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு ராஜன் மற்றும் தெற்கு ராஜன் கால்வாய் வழியாகவும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,00,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் சிதம்பரம் பகுதியில்  பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடம் மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக வடவாறு பாலத்தில் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாக்கலூர் மார்க்கத்தில் வாகனங்கள் செல்கின்றன. ஜெயங்கொண்டம், கும்பகோணம் இடையே நகரப்பேருந்துகள் மட்டும் வடவாறு வழியாக சென்று வருகின்றன.

இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 76,645 கனஅடியாக  குறைந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 73,891 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடாகா மாநிலம் காவிரி நீர் குடியிருப்பு பகுதிகளிலும் கேரளா மாநிலம் வயநாட்டிலும் மழை குறைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜா சாகர் ஆகிய அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து வினாடிக்கு 73,891 கனஅடி தண்ணீர் வீதம் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Kollidam ,Chidambaram , Kollidam river floods for 2nd day: Flood warning for many villages in Chidambaram area
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...