மொட்டில் கருகும் மல்லி, பிச்சி பூக்கள் ஆடிக்காற்றால் பூ விளைச்சல் கடும் பாதிப்பு-நெல்லை, தென்காசியில் விலை திடீர் உயர்வு

நெல்லை : நெல் லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கோடை போல் வெயில் கொளுத்தியது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து பலத்த காற்று வீசத்தொடங்கியது. இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

கடந்த சில தினங்களாக வீசும் காற்றால் கூரைகளும் பறக்கும் நிலை ஏற்படுகிறது. மின் இணைப்புகள் துண்டித்தும், மரக்கிளைகள் காற்றின் வேகத்தில் முறிந்து மின்பாதைகளில் விழுந்தும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் சேதங்கள் ஏற்படும் நிலையில் பூக்களின் விளைச்சலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்திலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கீழப்பாவூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போதைய காற்றால் பூக்கள் மொட்டிலேயே கருகியும், உதிர்ந்தும் விழுகின்றன. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

விளைச்சல் குறைவால் மொத்த பூ சந்தைகளுக்கு மல்லிகை, பிச்சிப் பூக்கள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நெல்லை பூச்சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டுவரும் பூக்கள் அளவு கணிசமாக குறைந்துள்ளது. சராசரியாக 10 கிலோ பூக்களை கொண்டு வரும் விவசாயிகள் நேற்று 2 கிலோ என்ற அளவிலேயே கொண்டுவந்தனர். இதனால் பூக்கள் விலை ஏறுமுகமாக உள்ளது.

மேலும் நேற்று ஆடி செவ்வாய்க்கிழமை என்பதால் பூக்களுக்கான தேவை அதிகமாக இருந்தது.

ஆனால் மல்லிகை, பிச்சிப்பூக்கள் வரத்து குறைந்ததால் கிலோவுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ 500 ரூபாயாக விற்கப்பட்ட இவற்றின் விலை நேற்று 700 ரூபாயாக உயர்ந்தது. விலை உயர்ந்தாலும் தேவை அதிகமாக இருந்ததால் சில்லறை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.

Related Stories: