சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் தடயவியல் துறை உதவி இயக்குநர் ஆய்வு

சின்னசேலம் : சின்னசேலம் அருகே  மாணவி இறந்த தனியார் பள்ளியில் சேதமதிப்பீடுகள் குறித்து தடயவியல்துறை போலீசார் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்  அருகே சேலம் புறவழிச்சாலையில்  தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா,  பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி(17) என்ற மாணவி பள்ளி விடுதியில்  தங்கி  பிளஸ் டூ படித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 13ம்தேதி  அதிகாலை  அந்த மாணவி தங்கியிருந்த விடுதி மாடியில் இருந்து விழுந்து இறந்து  விட்டதாக  தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தினர்.

ஆனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்த  பிரேதபரிசோதனை அறிக்கையில் திருப்தி இல்லையென தொடர்போராட்டம் நடத்தினர்.  மேலும் கடந்த 17ம்தேதி  மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் பள்ளியை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பள்ளி சூறையாடப்பட்டதுடன்,  பள்ளி பேருந்து,    போலீஸ் வேன், கார், பைக் ஆகியவை தீவைத்து  எரிக்கப்பட்டன.

இதையடுத்து மாணவி ஸ்ரீமதி இறந்து கிடந்த இடத்தை  தடயவியல் துறை உதவி இயக்குநர் சண்முகம் உள்ளிட்ட 3பேர் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்தனர். மேலும் கடந்த 17ம்தேதி போராட்டக்காரர்களால் தீவைத்து  எரிக்கப்பட்ட போலீஸ் வேன், பள்ளி பேருந்து உள்ளிட்ட வாகனங்களின்  சேதமதிப்பீடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் மேலும் தீவைப்பு சம்பவத்திற்கு  பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதாவது வெடிபொருள்  பயன்படுத்தி தீ வைக்கப்பட்டதா என்றும் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள்  பயன்படுத்தப்பட்டதா என்றும் ஆய்வு செய்தனர். அதைப்போல கட்டிடங்களின்  சேதங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

Related Stories: