×

வரலாறு காணாத வெப்ப அலையால் சுட்டெரிக்கும் ஐரோப்பா... குடியிருப்புகளில் பரவும் காட்டுத்தீயால் மக்கள் அவதி

லண்டன்: வரலாறு காணாத வெப்ப அலையால் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் கடந்த 1 வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லண்டன் நகருக்குள்ளும் காட்டுத்தீ பரவி, குடியிருப்புகள் பற்றியெரிகின்றன. தெற்கு ஐரோப்பிய நாடுகள், வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவிய நிலையில், லண்டன் நகரமும் அதிலிருந்து தப்பவில்லை. லண்டனின் கிழக்கு பகுதியிலுள்ள வென்னிங்டன் பகுதியில் குடியிருப்புகள் வரை காட்டுத்தீ பரவியது. சுமார் 100 ஏக்கரில் பரவிய காட்டுத் தீயில் குடியிருப்புகளும் பற்றி எரிகின்றது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெப்ப அலையால் பிரிட்டன் மக்கள் இதுவரை கண்டிராத சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொண்டுள்ளனர். உட்சபட்சமாக நேற்று, பிரிட்டனில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சராசரியாக 18 டிகிரி செல்ஸியஸ் முதல் 25 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ளும் பிரிட்டனில், தற்போது 2 மடங்காக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் நெருப்பை பயன்படுத்த வேண்டாம்; உடைந்த பாட்டில்கள், கண்ணாடிகளை கீழே கொட்ட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் லண்டன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கிரீஸ் நாட்டிலும் தலைநகர் ஏதென்ஸிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள புறநகர் பகுதி வரை காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் கி.மீ. கணக்கில் வானம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளை காட்டுத்தீ நெருங்கி இருப்பதால், ஹெலிகாப்டரில் தீயை அணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. இதனால் பாரீஸ் நகர் பகுதிகளில் குளிரூட்டும் அறைகள் பல திறக்கப்பட்டது. இயல்பை மீறி அதிகளவு வெப்பம் சுட்டெரிப்பதால் பாரீஸில் இரவிலும் பல பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தின் முன்பாக உள்ள ட்ரோகெடரோ பூங்காவின் நீரூற்றுகள் நீச்சல் குளங்களாக மாறியுள்ளன.

ஸ்பெயினின் வடமேற்கு மாகாணமான ஜெமோராவிலும் காட்டுத்தீ குடியிருப்புகளை நெருங்கி விட்டது. இங்குள்ள டபரா கிராமம், போர்ச்சுக்கல் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெமோரா மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய 32 கிராமங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். கடும் வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் மட்டும் இதுவரை 1,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து ஜெர்மனியும் தப்பவில்லை. நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது.

குழந்தைகளுடன் வெளியே செல்வோர் காலை நேரத்தில் சென்று வருவது நல்லது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடு எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம் என சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.               


Tags : Europe , History, heat wave, Europe, housing, wildfires, suffering
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!