×

இலங்கை அரசியல் வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்தல் : 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பு!!

கொழும்பு:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததால், தற்போது புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.மக்கள் கிளர்ச்சியால் இலங்கையின் அரசு அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டனர். இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே செயல்பட்டு வரும் நிலையில், இன்று புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா, அதிபர் தேர்தலில் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி டலஸ் அலகபெருமவை ஆதரிப்பதாக தெரிவித்தார். இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, ஜேவிபி கட்சி தலைவர் அனுராகுமார திசநாயகே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி அணி தலைவர் டல்லாஸ் அலகபெருமா ஆகியோர் வேட்பாளர்களாக நிற்கின்றனர். ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளது. அலகபெருமவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கோத்தயபயாவின் பதவிக்காலம் முடியும் 2024 நவம்பர் வரை பதவியில் இருப்பார். 1993ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அரசியல் வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Sri Lanka ,election , Sri Lanka, Politics, Parliament, President, Election
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு