×

பேரண்டூர் கிராமத்தில் நூலக கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்

பெரியபாளையம்: பேரண்டூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் இல்லாததால் நூலக கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் ஊராட்சியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஓடு போட்ட அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையத்தில் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயல்கின்றனர்.

30 ஆண்டுகள் ஆன கட்டிடம் என்பதால் அந்த கட்டிடம் பழுதடைந்து  கட்டிடத்தில் மேல் உள்ள ஓடுகள் உடைந்து அதிலிருந்து மழை நீர் ஒழுகும் நிலை ஏற்பட்டது. மேலும் மழைநீர் உள்ளே வந்ததால் அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் மழைநீரில் நனைந்து வீணாகியது. மேலும் பழைய கட்டிடம் என்பதால் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்த காரணத்தினால் அங்குள்ள நூலக கட்டிடத்தில் தற்போது இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இதனால் இந்த நூலகத்திற்கு நாள்தோறும் நாளிதழ்களும் படிப்பதற்கு வந்து செல்லும் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றிவிட்டு  புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சிரமம்
பொதுமக்கள் கூறுகையில், `ஒரே கட்டிடத்தில் இரண்டு நிர்வாகம் செயல்பட்டு வருவதால் குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என தெரிவித்தனர்.

Tags : Anganwadi ,center ,Barandur village , Barandur Gram, Library Building, Anganwadi Centre
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்