முபதலா ஓபனில் களமிறங்குகிறார்: நவோமி ஒசாகா

நியூயார்க்: பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு பிறகு சர்வதேச  போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா மீண்டும் களம் திரும்புகிறார்.ஜப்பான் நட்சத்திரம் ஒசாகா (24வயது, 38வது ரேங்க்) தலா 2 ஆஸி., யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். மொத்தத்தில் 7 சர்வதேச பட்டங்களை வசப்படுத்தியவர். கடந்த ஒன்றரை  ஆண்டுகளாக பட்டங்கள் ஏதும் வென்றதில்லை. 2021 ஆஸி. ஓபன் பட்டம் வென்ற பிறகு கவனிக்கத்தக்க வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்த ஆண்டு ஆஸி. ஓபனில் 3வது சுற்றிலும், பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றிலும் தோற்று வெளியேறினார்.   கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விம்பிள்டனில் களம் காணவில்லை. இந்நிலையில் ஆக. 1ம் தேதி அமெரிக்காவின் செயின்ட் ஜோசேவில் நடைபெற உள்ள முபதலா சிலிகான் வேலி  கிளாசிக் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை  ஒசாகா நேற்று உறுதி செய்தார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் ஆக.29ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் முன்னணி வீராங்கனைகளான நடப்பு  விம்பிள்டன் சாம்பியன் எலனா ரைபாகினா (கஜகிஸ்தான்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா),  கோரி காப் (அமெரிக்கா), முன்னாள் சாம்பியன்  பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா)  ஆகியோரும் முபதலா ஓபனில் களமிறங்குகின்றனர்.

Related Stories: