×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தினமும் 750 டோக்கன்கள் நிர்ணயம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் அதிகாலையில் அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்காக தனிகவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை முந்தைய நாளில் பெறும் பக்தர்கள், மறுநாள் அதிகாலை 2 மணியளவில் சுவாமியை தரிசிப்பார்கள்.

ஆண்கள் வேட்டி மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார் அல்லது புடவையிலும் அனுமதிக்கப்படுவர். ஆண்கள், பெண்கள் தனித்தனி குழுவாக அங்கபிரதட்சணம் செய்து அதன்பின்னர் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிப்பார்கள். இந்நிலையில் அங்க பிரதட்சண டிக்கெட்டை கடந்த சில மாதங்களாக தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி ஆகஸ்ட் மாத அங்கபிரதட்சண டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை தவிர்த்து தினந்தோறும் 750 டோக்கன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்களை ‘https://tirupatibalaji.ap.gov.in’ என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

8 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 77,273 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 35,893 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ4.50 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியிருந்தது. எஸ்எம்சி கட்டிடம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Eummalayan Temple , Tirupati Seven Malayan Temple, Angapradtsana Ticket, Tokens Determination
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று...