செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவிற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், நிசான் மோட்டார்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹண்ட் இன் ஹண்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பொது மருத்துவம் மற்றும் இருதயவியல் துறை புறநோயாளிகள் பிரிவு கட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மோ.அன்பரசன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

பின்னர், அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ‘செங்கல்பட்டு வேதாசலம் முதலியார் இம்மருத்துவமனை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பை இலவசமாக வழங்கினார். இம்மருத்துவமனை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. தினந்தோறும் 3000 முதல் 3500 புறநோயாளிகள் வந்து பயன்பெற்று செல்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு 600 முதல் 700 நோயாளிகள் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, இருதய நோய் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பொது மருத்துவம் மற்றும் இருதயவியல் துறை வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம் நிசான் மோட்டார்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹண்ட் இன் ஹண்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும், தொண்டு நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இம்மருத்துவமனைக்கு தேவையான அவசர கால ஊர்திகளை வழங்கிட முன்வர வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியிர் ஆ.ர.ராகுல் நாத், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) அனிதா, நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஹண்ட் இன் ஹண்ட் இந்தியா முதுநிலை ஆலோசகர் முத்துசாமி, துணை பொதுமேலாளர் செல்வகுமார், நிசான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, மருத்துவ கண்காணிப்பாளர் நர்மதாலட்சுமி, இணை பேராசிரியர் இருதயவியல் துறை கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: