அகதியாக தஞ்சம் அடைய நாடு, நாடாக ஓடும் ராஜபக்சே குடும்பம்... மியூசிக்கல் சேர் சண்டை: வாழ தகுதியில்லா நாடாக மாறும் இலங்கை

சர்வாதிகாரம் ஒரு நாள் விரட்டியக்கப்படும். இன்று, இலங்கையில் அது நடந்துள்ளது. 1905ம் ஆண்டு டான் ஆல்வின் ராஜபக்சே மூலம் தொடங்கிய குடும்ப ஆதிக்கம் 2022ல் முடிவுக்கு வந்துள்ளது. ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தைகள் என்ன? கொஞ்ச நஞ்சம் கொடுமைகளா அனுபவித்தார்கள் இலங்கை தமிழர்கள். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்’. இது ராஜபக்சே குடும்பத்துக்கு சரியாக பொருந்துகிறது.

2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் இலங்கை தமிழர்களை ஈவு இரக்கமின்றி பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இதற்கு உத்தரவு போட்டது, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே. செயல்படுத்தியது, அப்போதைய ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே. ஏராளமானோர் உயிருக்கு பயந்து திரிகோணமலை கடற்படை தளத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் அகதிகளாக வந்தனர். கொலைவெறி தாக்குதல் நடத்தி பதவி சுகம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றை அனுபவித்த ராஜபக்சே குடும்பம், சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் உயிர் மட்டும் இருந்தால்போதும் என்று அகதியாக நாடு நாடாக தஞ்சம் கேட்டு தப்பி பிழைத்து வருகிறது.

விடாத அதிகார மோகம்

இலங்கையில் கொரோனா ஊரடங்கு, சுற்றுலாத்துறை முடக்கம், அன்னிய செலாவணி வரலாறு காணாத சரிவு உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது. இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் ராஜபக்சே குடும்பம் தான். 2005ம் ஆண்டு 2015ம் ஆண்டு அதிகார பதவியில் ராஜபக்சே குடும்பம் இருந்தது. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் வெற்றியடைந்ததன் மூலம் சிங்களர்கள் மகிந்தவை ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால், அதே சிங்களர்கள் துரத்தி அடித்தனர். 2015ம் ஆண்டு நடந்த தேர்தல் அந்த குடும்பம் ஆட்டம் கண்டது.  ஆனால், அதிகார மோகம் மட்டும் ராஜபக்சே குடும்பத்தை விடவில்லை.

கொதித்தெழுந்த மக்கள்

2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிபரான கோத்தபய ராஜபக்சே, மகிந்தவை மீண்டும் பிரதமராக அமர்த்தி அழகு பார்த்தார். இதுதவிர, மூத்த சகோதரர் சமல் ராஜபக்சே, இளைய சகோதரர் பசில் ராஜபக்சே, மகிந்த ராஜபச்சேவின் மகன் நமல் ராஜபக்சே என அவரது குடும்பத்தினரை அமைச்சர்களாக அலங்கரித்தார். இவ்வாறு, இலங்கை அரசு அதிகாரம் முழுவதும் அவர்களது குடும்பத்தினரிடம் சென்றது. இவர்களின் அதிகார வர்க்கம், ஆடம்பர வாழ்க்கை மற்றும் ஊழல்களுக்கு வேட்டு வைத்தது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி.

இதனால், ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அதிகார பதவியில் இருந்து விலக கோரி கடந்த ஏப்ரல் 9ம் தேதி, தன்னெழுச்சியாக மக்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் குதித்தனர். பிரதமர், அதிபரின் இல்லம்  மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தியதால் நெருக்கடி முற்றியது. மகிந்த பதவியில் இருந்து விலக வற்புறுத்தப்பட்டார். இதனால், அவரது ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏற்படுத்தி, கூலிப்படைகள் கொண்டு போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு மக்கள் தாக்குதல் நடத்தினர். ராஜபக்சேக்கள் வீடு உள்பட அதிகார வர்க்கத்தின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமர் பதவியை மகிந்த ராஜினாமா செய்தார்.

எம்பிக்கள் மூலம் குடைச்சல்

புதிய பிரதமராக பதவியேற்பவர் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கோத்தபய எண்ணினார். இதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா, ராஜபக்சே குடும்பத்தினர் அதிகார பதவிகளில் இருக்கக்கூடாது, அதிபரின் அதிகாரங்கள் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 14 நிபந்தனைகளை விதித்தார். இதற்கு கோத்தபய ஒத்துவரவில்லை. ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் கோத்தபய. அவரும், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது சட்டத்திருத்தத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்தார் கோத்தபய. பின்னர், ரணில் பிரதமராக பதவியேற்ற பின், நிபந்தனைகளை நிறைவேற்ற மறுத்து, தங்களது கட்சி எம்பிக்கள் மூலம் கோத்தபய முட்டுக்கட்டை போட்டார். கோத்தபயவுக்கு ஆதரவாக ரணில் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள், மக்கள் குற்றம்சாட்டத் தொடங்கினர்.

தஞ்சம் கேட்கும் கோத்தபய

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்ததால் மக்கள் போராட்டம் புரட்சியாக மாறியதை தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஏற்கனவே சமல், நமல் ராஜபக்சேக்களும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். கோத்தபய மட்டும் பதவியில் தொடர்ந்ததால், கடந்த 9ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்திய மக்கள் பிரதமர், அதிபர் மாளிகையை கைப்பற்றி, சூறையாடினர். மக்களை எதிர்கொள்ள துணிவு இல்லாத கோத்தபய, குடும்பத்துடன் மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அங்கும் போராட்டம் வெடித்ததால் சிங்கப்பூருக்கு ஓடினார். அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அதில், ‘இலங்கையின் எல்லா பிரச்னைக்கும் கொரோனாதான் காராணம்’ என்று கூறினார். சிங்கப்பூர் அரசு, 15 நாட்கள் தங்க மட்டுமே அனுமதி அளித்துள்ளதால், தஞ்சமடைய இடம் தேடி கொண்டிருக்கிறார் கோத்தபய.

மகிந்த, பசிலுக்கு தடை

மகிந்த மற்றும் பசில் ராஜபக்சேவும் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டனர். பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் கருவூல செயலாளர் அட்டிகலா ஆகியோர்தான் காரணம் என வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 28ம்தேதி வரை மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது.

திரைமறைவு உத்தரவு

நாட்டை விட்டு வெளியேறினாலும், கோத்தபய தனது எம்பிக்கள் மூலம் அரசை இயக்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, ரணிலுக்கு அவர் ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வழக்கமாக அதிபர் பதவியை குடும்பத்தினரை தவிர யாருக்கும் கொடுக்க முன்வராத ராஜபக்சே குடும்பம், இடைக்கால அதிபராக ரணிலை நியமித்துள்ளார் கோத்தபய. நாட்டை விட்டு வெளியேறிய பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரணில் பதவியேற்று 3 மாதமாகியும், பொருளாதாரத்தை மீட்க பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகார பதவியில் யார் இருப்பது என்ற பிரச்னையை சமாளிப்பதற்கே நேரம் போய்விட்டது. இதனால், இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணிலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அவர் உடனடியாக பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதிபர் பதவி சண்டை

அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, ஜேவிபி கட்சி தலைவர் அனுராகுமார திசநாயகே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி அணி தலைவர் டல்லாஸ் அலகபெருமா ஆகியோர் வேட்பாளர்களாக நிற்கின்றனர். ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ரணிலுக்கு எதிராக மாணவ சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளதால், அசம்பாவிதங்கள் தவிர்க்க இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரணிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஒரு பக்கம் அனைத்துக்கட்சி ஆட்சி வேண்டும், 19வது சட்டத்திருத்தம் மீண்டும் அமல்படுத்துவேன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என்று ரணில் கூறினார். ஆனால், 3 மாதத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை. கோத்தபயவின் உத்தரவுக்கு தலையாட்டும் பொம்மையாக ரணில் செயல்பட்டதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. ‘நாடு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. பெரும் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியது மிகப் பெரிய தவறாகும். நாட்டின் குழப்பங்களை தீர்க்க வேண்டுமானால், புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா தெரிவித்திருந்தார். இதேபோல், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்கள், ‘நாட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் மீட்டு காட்டுகிறோம்’ என்று கூறி உள்ளனர். அனைத்துகட்சிகள் ஆட்சியில், சஜித் பிரேமதசா அதிபராக விரும்புகிறார். இவருக்கு முன்னாள் அதிபர் மைதிரி பால சிறிசேனா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பின்வாங்கிய பிரேமதசா

இந்நிலையில், சஜித் பிரேமதசா, அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என திடீரென  பின்வாங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நான்  நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் எனது மக்களின்  நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை திரும்பப்  பெறுகிறேன். எங்களது கட்சியானது, எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து அதிபர்  தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்கும்’ என்று தெரிவித்துள்ளார். சஜித்  பிரேமதாசவின் இந்த திடீர் அறிவிப்பால், அவரது கட்சி எம்பிக்கள் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி அணி எம்பியான டல்லாஸ் அலகபெருமாவுக்கு  ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிக்விகின்றன.

சஜித் பிரேமதாசவின்  திடீர் பின்வாங்கல் முடிவால், அதிபர் பதவிக்கு  ரணில் விக்கிரமசிங்கே, ஜேவிபி கட்சி  தலைவர் அனுராகுமார திசநாயகே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின்  அதிருப்தி அணி தலைவர் டல்லாஸ் அலகபெருமா ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதால் அவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் அறிவித்துள்ளதால், ரணிலின் அதிபர் காலம் எவ்வளவு நாள் என்பது கேள்விக்குறிதான்.

அதிமுக சண்டை போல்...

இலங்கையில் பொருளாதாரத்தை மீட்பதற்கான போராட்டம் நடக்கவில்லை. அதிகார பதவி சண்டைதான் நடந்து வருகிறது. இந்த சண்டையால் உலக வங்கி, சர்வதேச நிதி நாணயம் மற்றும் பல நாடுகள் கடன் கொடுக்க தயங்குகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீர்திருத்தம் மிக முக்கியம். இதை உருவாக்கவும், செயல்படுத்தவும் அங்குள்ள கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்படவில்லை. அதிமுகவில் நடக்கும் பதவி சண்டைபோல், இலங்கையில் அதிபர் பதவிக்கு நடக்கும் மியூசிக்கல் சேர் சண்டையால்,  நாட்டின் நிலை இன்னும் மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திவாலான நிலையில், மக்கள் வாழவே தகுதி  இல்லாத நாடாக அறிவிக்கப்படும். தற்போது, கிட்டத்திட்ட இந்த நிலைமையில்தான்  இலங்கையில் உள்ளது.

ரணில் சதி வெற்றி பெறுமா?

இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் கலாநிதி தயான் ஜயதிலக கூறுகையில், ‘இலங்கை அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கே, அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளார். அவரது சதியை வீழ்த்த முடியவில்லை என்றால், ராஜபக்சேக்களை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டும். ராஜபக்சேக்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

எம்பிக்களுக்கு மிரட்டல் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, இலங்கையில் பணியமர்த்தப்பட்ட இந்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். எனவே, இலங்கையில் உள்ள இந்தியர்கள் இருந்து, பாதுகாப்பாக தங்களது நடமாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்கு மாதத்தில் ரூ7,647 கோடி கடன்

கடந்த 4 மாதத்தில் மட்டும் இலங்கை பெற்ற கடன் விவரங்கள்:

இந்தியா        ரூ2,977 கோடி

ஆசிய வங்கி     ரூ2,810 கோடி

உலக வங்கி    ரூ531 கோடி

சீனா        ரூ536 கோடி

இதுதவிர, பிற நாடுகளும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் நிதியுதவிகளையும் அளித்துள்ளன. இலங்கையின் இந்த நிலைமை சீனா ஒரு முக்கிய காரணம். கடன் மேல் கடன் கொடுத்து வட்டி வசூலித்து, அந்த கடனை அடைக்க இன்னொரு கடன் கொடுத்தது. தற்போது, இலங்கை நிலைமை அறிந்து பெயருக்கு உதவி செய்துவிட்டு, ‘தின்னை எப்போ காலியாகும்’ என்று காத்துக்கிடக்கிறது.

நாடாளுமன்றம் மூலம் 2வது முறையாக அதிபர் தேர்தல்

* 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மக்களால் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

* கடந்த 1993ம் ஆண்டு மே மாதம் அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதையடுத்து, அதிபராக டி.பி.விஜதுங்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஏதுமின்றி தேர்வு செய்யப்பட்டார்.

* இலங்கை அரசியல் வரலாற்றில் 2வது முறையாக நாடாளுமன்றத்தின் மூலம் அதிபரை தேர்வு செய்யும் நடைமுறை இன்று நடக்கிறது.

* நாடாளுமன்றத்தில் இன்று நடக்கும் அதிபர் தேர்தலில், 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

* போராட்டம் அறிவிப்பு காரணமாக, அதிபர் தேர்தல் நடக்கும் நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர், கோத்தபயவின் பதவி காலம் முடிவடையும் நவம்பர் 2024 வரை பதவியில் இருப்பார்.

* சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திர கட்சி எவருக்கும் ஆதரவு தராது’ என்று கூறியுள்ளார்.

மொத்த கடன்: ரூ4,00,0000 கோடி

2026க்குள் கொடுக்க வேண்டியது : ரூ2,00,0000 கோடி

இந்தாண்டு இறுதிக்குள் கொடுக்க வேண்டியது: ரூ60,000 கோடி

தற்காலிகமாக நாட்டை மீட்க தேவை: ரூ35,000 கோடி

மொத்த மக்கள் தொகை: 2.2 கோடி

உணவு இல்லாமல் தவிப்போர்: 63 லட்சம் பேர்

போதுமான உணவு உட்கொள்ளாதோர்: 67 லட்சம் பேர்

உண்ணும் உணவை குறைத்தோர்: 53 லட்சம் பேர்

கடுமையாக பாதிக்கப்பட்டோர்: 65,600 பேர்

Related Stories: