உணவு உற்பத்தி தொடர்பான தொழில்புரியும் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வங்கி கடனில் 35% முதலீட்டு மானியம்: நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தகவல்

சென்னை: உணவு உற்பத்தி தொடர்பான தொழில் புரியும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்படும் வங்கி கடனில் 35 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா கூறினார். பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி திட்டம் குறித்து நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் ரிப்பன் மாளிகையில் உள்ள அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

  இதில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா பேசியதாவது:

  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுயதொழில்புரிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கு மேலும் ஒரு வாய்ப்பாக பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி தொடர்பான தொழில் புரிய கடனுதவி வழங்கப்படுகிறது.  பொதுவாக, வழங்கப்படும் கடனுதவிகளில் வட்டிக்கான மானியம் வழங்கப்படும்.  ஆனால், இத்திட்டத்தில் வங்கிக் கடனில் 35 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படுகிறது. முதலீட்டு ஆதார நிதி வங்கிக் கடனுதவி மற்றும் 35 சதவீத மூலதன முதலீட்டு மானியம் பெற்று நகர்ப்புற சுய உதவிக் குழுவினர் பயன்பெற வேண்டும் என்றார்.

Related Stories: