வன்முறையில் ஆவணங்கள் எரிந்து நாசம் மாணவர்களுக்கு வேறு சான்று வழங்க நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சியில் சேதம் அடைந்த  மாணவர்களுக்கான சான்றுகளை புதியதாக வழங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து கடந்த 17ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் வாகனங்களை சேதப்படுத்தியதுடன், பள்ளியின் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த ஆவணங்களையும் சேதப்படுத்தினர். அதில் பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியரின் சான்றுகளும் எரிந்துள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

மாணவர்களின் சான்றுகள் எரிக்கப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருவாய்த்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்  எதிர்காலம்  குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் சான்று சரிபார்ப்பின்போதே, போலி நபர்கள், வெளி மாநிலத்தவர்களை கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய  தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த்தாள் நடைமுறையை கொண்டு வர விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Related Stories: