×

வரும் நவம்பர், டிசம்பர் வாக்கில் நடைபெறும் குஜராத், இமாச்சல் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கு தேர்தல்: தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: வரும் நவம்பர், டிசம்பர் வாக்கில் நடைபெறும் குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய  அரசு ரத்து செய்தது. அதன் பின்னர் மாநிலத்தில் எந்த தேர்தலும்  நடைபெறவில்லை. ஆளுநர் தலைமையிலான அரசுதான் செயல்பட்டு வருகிறது. ஜம்மு -  காஷ்மீரின் எல்லை மறுவரையறை பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக தலைமை  தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக ஜம்மு-காஷ்மீரில்  மொத்தம் 83 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இதில் 46 இடங்கள் காஷ்மீரிலும்,  37 இடங்கள் ஜம்முவிலும் உள்ளன. புதிய மறுவரையறையின்படி மொத்தம் 90 சட்டமன்ற  தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி காஷ்மீரில் 47, ஜம்முவில் 43 இடங்கள்  இடம்பெறும். முதல் முறையாக பழங்குடியினருக்கு 9 இடங்களும், பட்டியல்  சாதியினருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே நேரம்  ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தாததால், அம்மாநில அரசியல்  கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. தற்போது சட்டமன்ற தேர்தல்  நடத்துவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுவதால், அரசியல்  கட்சிகளும் சுறுசுறுப்பாகி உள்ளன. இதற்கிடையில், ஜூலை மாத தொடக்கத்தில்,  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக்  கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் மாநிலத்தில் தேர்தலில் ஒன்றாகப்  போட்டியிடப் போவதாகக் கூறினர். ஜம்மு-காஷ்மீரில் வரவிருக்கும் சட்டமன்றத்  தேர்தலில் ‘குப்கர்’ கூட்டணி ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று  கூறப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுடன், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களும் நடத்தப்படலாம் என்றும், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.



Tags : Jammu ,Kashmir ,Gujarat ,Himachal ,elections ,Chief Election Commission , Elections for Jammu and Kashmir along with Gujarat and Himachal elections to be held by November, December: Chief Election Commission sources inform
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...