×

ஈரோடு அருகே வகுப்பறையில் ஹெச்.எம். போதை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அனுப்பர்பாளையம் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 51 மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த மாதம் பணி மாறுதலாகி வந்த தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் என்பவர் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு வகுப்பறையில் சரிவர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்காமல் இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, பணிக்கு வந்த தலைமை ஆசிரியர் ஜான் சேவியரை பள்ளிக்குள் நுழைய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை ஆசிரியர் திரும்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற வட்டார கல்வி அலுவலர் சரவணன், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார், ஒன்றிய கவுன்சிலர் பற்குணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வந்தபின் 17 மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்று விட்டதாகவும், பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு கல்வி கற்பிக்காமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உயரதிகாரிகளிடம் பேசி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பள்ளி வளாகத்தில் ஜான் சேவியர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை வீசி சென்றதையும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Erode ,H.M. , In a classroom near Erode, H.M. addiction
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!