×

சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் உடனான கள ஆய்வுக் கூட்டம்

சென்னை: இன்று (19.07.2022) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய்(ம) பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் உடனான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 2022-2023 கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றுகள் காலதாமதமின்றி உடனடியாக கிடைக்கும் வகையிலும், மக்களின் பிற சான்றுகள் தொடர்பான விண்ணப்பங்களையும் பரிசீலித்து, சான்றுகளை உடனடியாக வழங்கிடவும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, 01.04.2022 முதல் பெறப்பட்ட 1,93,460 விண்ணப்பங்களில் 1,81,103 சான்றுகள் சென்னை மாவட்டத்தில் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், அதிக அளவில் வரப்பெற்றுள்ளதால், அவற்றை விரைந்து தீர்வு காணும் வகையில், வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில், சென்னை மாவட்டத்தில் பெறப்பட்ட 33,326 உட்பிரிவு இல்லாத மனுக்களில் 29,137 மனுக்களும், உட்பிரிவு உள்ள 14,472 மனுக்களில் 10,791  மனுக்களும் தீர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாவட்டத்தில்  அரசின் புதிய அறிவிப்பின் படி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக 72 மனுக்கள் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண். 612-ன் படி நகரளவை பதிவேடுகளையும், கணினி பட்டாவினையும் ஒப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதில், சென்னை மாவட்டத்தில் 67,748 பிழைகள் கண்டறியப்பட்டு 46,074 இனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் 20,600 இனங்கள் கணினியில் சரிசெய்யப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு பத்திரப் பதிவு மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட பரிவர்த்தனைகளில் ஏற்படும் இன்னல்கள் களையப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதன்மை செயலாளர் வருவாய்த் துறை குமார் ஜயந்த், ஆணையர் நில நிர்வாகம் சு.நாகராஜன், ஆணையர் சமூக பாதுகாப்புத் திட்டம் டாக்டர்.ந.வெங்கடாச்சலம், கூடுதல் ஆணையர் நில நிர்வாகம் ச.ஜெயந்தி, இயக்குநர் ஆய்வு மற்றும் தீர்வு டாக்டர்.டி.ஜி.வினைய், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.அமிர்த ஜோதி, மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Tags : Minister ,Chennai ,K. K. S.S. S.S. ,R.R. ,Revenue Department ,Ramachandran , Field Study Meeting with Revenue Department Officers led by Minister KKSSR Ramachandran in Chennai
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...