தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை: தமிழகம் முழுவதும் 24ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகில் 63 நாடுகளில் குரங்கு அம்மையின் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கூட கடந்த வாரம் கேரளாவில் ஒருவருக்கும், நேற்று தெலங்கானாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.  முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருக்கிற நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலோ அல்லது மாவட்ட அரசு மருத்துவமனையிலோ பிரத்யேகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை நோய்க்கான பிரத்யேக வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் அந்த வார்டு தயார் நிலையில் உள்ளது.

ஒன்றிய அரசின் ஐசிஎம்ஆரஅமைப்பு ஏற்கனவே 15 ஆய்வகங்களை இந்தியா முழுவதும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறிய ஆய்வகம் அமைக்க அறிவுறுத்தியுள்ளது.அதில் தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அப்படி அனுமதி வரும் பட்சத்தில் கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மையத்தை ஆய்வகமாக பயன்படுத்த உள்ளோம்.   தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதுவருகிற 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம். அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியை செய்ய உள்ளோம். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: