×

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அவை தொடங்கிய முதல் நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5% ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் 2ம் நாள் அவை தொடங்கியது. மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, சபாநாயகர் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். விலைவாசி பிரச்சனை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, அவர்கள் குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதனையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதேபோல் மாநிலங்களவை கூடியதும், விலைவாசி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்ததால், அவையில் அமளி மூண்டது. விவாதம் நடத்த பின்னர் நேரம் ஒதுக்குவதாக உறுதியளித்த போதும், அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்த நிலையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் கூடியபோது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

Tags : Opposition, Amali, Parliament, Bicameral, deadlock
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...