×

சின்னாளபட்டி கிராமங்களில் வெண்டைக்காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே உள்ள கிராமங்களில் வெண்டைக்காய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கலிக்கம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் வெண்டைக்காய் உள்ளது.தமிழக உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது வெண்டைக்காய் ஆகும். குறைந்த விலைவில் கிடைப்பதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வெண்டைக்காய் பயன்படுத்தி வருகின்றனர். வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர்.

சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் பூ விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது வெண்டைக்காய் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஹைபிரிட் ரக வெண்டைக்காயை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கலிக்கம்பட்டிபகுதியில் பயிரிட்டுள்ள வெண்டைக்காய் பயிர்கள் நன்கு வளர்ந்து பூ விட்டு காய்கள் காய்த்து குலுங்குகின்றன. தற்போது அறுவடைக்கு தயாராகவும் உள்ளது. சராசரியாக காய்கறி மார்க்கெட்டில் வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்றால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும் என்பதை முன்னோர்கள் தொடர்ந்து கூறியதால் இன்றும் வெண்டைக்காய்க்கு உணவு பதார்த்தங்களில் தனி மவுசு உண்டு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது. சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது வெண்டைக்காய் பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வெண்டைக்காய் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு, அதிகம் வாங்கத் தொடங்கியதே இதற்கு காரணம்’’ என்றனர்.

Tags : Chinnalapatti , Chinnalapatti: Farmers are showing interest in cultivating mung beans in the villages near Chinnalapatti. Kalikkampatti
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...