நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி-திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : நிலத்தை அபகரிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 பேர் மனுக்களை அளித்தனர். அதன்மீது, உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் அளிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி காந்தி நகரை சேர்ந்த முனுசாமி மகன் முனியன்(48) என்பவர், திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.அதைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். மேலும், தானிப்பாடி காந்தி நகரில் கடந்த 2017ம் ஆண்டு தனது தாய் காசியம்மாள் பெயரில் இடம் வாங்கி உள்ளார்.

பின்னர், குடும்பத்துடன் கேரள மாநிலத்துக்கு சென்று கூலி வேலை செய்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரது தாய் காசியம்மாள் இறந்ததால் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது, அவரது இடத்தை சிலர் ஆக்கிரமித்தது தெரியவந்தது. அதை எதிர்த்து கேட்டதால், முனியனை தாக்கியுள்ளனர். இது ெதாடர்பாக, தானிப்பாடி போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கலசபாக்கம் அடுத்த கெங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடத்தப்பட்ட தனது 17 வயது மகளை மீட்டு தரக்கோரி, தீக்குளிக்கும் நோக்கத்துடன் மண்ணெண்ணைய் கேனுடன் வந்திருந்தார். போலீசார் நடத்திய சோதனையில், மண்ணெண்ணைய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தின்போது, தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்ககத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories: