தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு!: எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் பிரச்னை நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 11ம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17ம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்த நிலையில், ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மனோஜ் பாண்டியனிடம் இருந்து அதிமுக சட்டமன்ற கட்சி துணைத் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தாலும், எதிர்கட்சி துணைத் தலைவர் யார் என்பதை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுதான் இறுதி முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முன்னதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories: