நான் நேசிக்கும் நாடு, மக்களின் நலனுக்காக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு..!!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். நான் நேசிக்கும் நாடு, மக்களின் நலனுக்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்து அதன் காரணமாக அந்நாட்டின் அரசாங்கமே ஆட்டம் கண்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இடைக்கால அதிபராக ரணில் பதவியேற்றுள்ளார். இதனிடையே, புதிய அதிபருக்கான தேர்வு வரும் ஜூலை 20ம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தாமிகா தசநாயகே அதிபர் பதவி காலியாக உள்ளதாக அறிவித்தார். அதன்படி, ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாசா, எஸ்ல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற துல்லாஸ் அலபெருமா, ஜேவிபி கட்சியின் தலைவரான அருணா திசநாயகா உள்ளிட்ட 4 பேர் அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்திருந்தனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கே முன்னணியில் இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் கடும் போட்டி தருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சியின் வேட்பாளர் டல்லாஸ் அலகபெருமாவுக்கு ஆதரவு தருவதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்திருக்கிறார்.

Related Stories: