செல்போன் டவர்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி வசூல்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில்  செல்போன் டவர்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி வசூலிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.100ன்படி நியாய வாடகை மதிப்பின் அடிப்படையில்  அரையாண்டு  சொத்துவரி விதிக்கப்படுகிறது.  வாடகை மதிப்பானது, அடிப்படை கட்டணம்  மற்றும் பரப்பளவு மற்றும் குடியிருப்பு/ குடியிருப்பு அல்லாத பகுதி என்ற  காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபால், தொழில் வரி சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி  வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் ஆகியோரிடம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர்  ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியை பெருநகர  சென்னை மாநகராட்சிக்கு செலுத்திட வேண்டும்.

வருவாய் ஈட்டுவோர்  வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர  சென்னை மாநகராட்சிக்கு தெரிவிக்க  வேண்டும்.  இந்த விவரங்களை பதிந்த பின்னர் பெருநகர  சென்னை மாநகராட்சி யால் அவர்களுக்குத் தனியே தொழில் வரியினை செலுத்தும் வசதிக்காக தனியே எண்  ஒன்று வழங்கப்படும்.குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பலர் முறையாக சொத்து வரி செலுத்தாததால் ஆண்டுதோறும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சொத்து வரியை செலுத்தாத நிறுவனங்கள் மீது  மாநகராட்சி அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, பல லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிப்பது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்பு அறிவிப்பு பேனர் வைப்பது, நிறுவனங்களை மூடி சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத செல்போன் டவர்களை கணக்கிடும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதற்காக, செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். சென்னையில்  பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர்களுக்கு என சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை  செலுத்தி வருகிறது. இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 3,000 செல்போன் டவர்கள் உள்ளன. இந்த டவர்களுக்கு சென்னை மாநகராட்சி மாநகராட்சியின் பழைய வரிவிதிப்பு முறையின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டு வந்தது.அதாவது, அனைத்து செல்போன் டவர்களுக்கும்  அரையாண்டுக்கு ரூ.15,000 சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன்படி, செல்போன் டவர் வைக்க அனுமதி அளித்தவர்கள் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30,000 செலுத்த வேண்டும்.இந்த நடைமுறையை மாற்றி புதிய முறையில் செல்போன் டவர்களுக்கு வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆனையர் ககன் தீப் சிங் பேடி சமீபத்தில் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் செல்போன் டவர் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சென்னையில் செல்போன் டவர்களுக்கான வாடகை ஒரு இடத்தில் குறைவாகவும், ஒரு இடத்தில் அதிகமாகவும் உள்ளது. அனைவருக்கும் ஒரே தொகையாக அல்லாமல் இனிமேல் இடத்தின் உரிமையாளர்கள் செல்போன் டவருக்காக பெறும் வாடகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சொத்து வரியாக வசூலிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: