×

தனியார் பள்ளிகள் நடத்திய போராட்டம் வாபஸ் தமிழகத்தில் 91% பள்ளிகள் இயங்கின: இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்

சென்னை: தமிழகத்தில் நேற்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், மாணவிக்கு நீதி கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஒருசில சங்கங்கள்  அறிவித்தன. ஆனால், இதனை மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் மறுத்தது. இதை தொடர்ந்து, நேற்று இயங்கிய பள்ளிகளின் பட்டியலை  மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 91% தனியார்  பள்ளிகள் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 11 மாவட்டத்தில் 100% தனியார் பள்ளிகள் இயங்கி உள்ளன. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்கியுள்ளன. குறைந்தபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 190 பள்ளிகளில் 31 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளில் 70 பள்ளிகள் மட்டுமே நேற்று இயங்கின.கலவரம் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 167 தனியார் பள்ளிகளில் 153 தனியார் பள்ளிகள் வழக்கம்போல இயங்கி உள்ளது. சென்னையை பொறுத்தவரை 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் இயங்கியுள்ளன.

இது மொத்தம் உள்ள பள்ளிகளில் 99 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சிபிஎஸ்இ என மொத்தமாக 11,335 தனியார் பள்ளிகளில் நேற்று 10,348 பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி உள்ளன.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்தையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் நடத்திய ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vapas Tamil Nadu , 91% schools functioned in Tamil Nadu as private schools call off strike: normal operations from today
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...