பணியின் போது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போலீஸ்காரர் டிஸ்மிஸ்: தூத்துக்குடி எஸ்பி உத்தரவு

தூத்துக்குடி: பணியின் போது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போலீஸ்காரரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சசிகுமார் (32). இவர், கடந்த 2019ம் ஆண்டு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல், அங்குள்ள ஒரு கோயில் பகுதிக்கு சீருடையில் சென்று உள்ளார். அங்கு ஒரு சிறுமி தனது காதலருடன் இருந்ததை பார்த்த சசிகுமார், அவர்களை தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார்.

பின்னர் அதனை அவர்களின் பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி விடுவதாக மிரட்டி உள்ளார். மேலும் அந்த வாலிபரை மிரட்டி பணம் கொண்டு வருமாறு கூறி உள்ளார். இதனால் அவர் சிறுமியை அங்கு விட்டு விட்டு பணம் பெறுவதற்காக சென்று விட்டாராம்.அப்போது தனிமையில் இருந்த சிறுமிக்கு, போலீஸ்காரர் சசிகுமார் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடந்து வந்தது. இதில் போலீஸ்காரர் சசிகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த போலீஸ் துறையின் கட்டுக்கோப்பை சீர்குலைத்து, பொதுமக்களின் மத்தியில் போலீஸ் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல் புரிந்துள்ள போலீஸ்காரர் சசிகுமாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: