சர்வதேச கிரிக்கெட் தினேஷ் ராம்தின் ஓய்வு

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் (37 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டிரினிடாட் & டுபாகோ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் யு-19 அணிகளின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்த ராம்தின் (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்), தேசிய சீனியர் அணிக்காக 2005ல் அறிமுகமானார். 2014ல் டேரன் சம்மிக்கு பதிலாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பேற்று மொத்தம் 13 டெஸ்டில் தலைமை வகித்துள்ளார். அவற்றில் வெஸ்ட் இண்டீஸ் 4 வெற்றி, 2 டிரா, 7 தோல்வி கண்டுள்ளது.

2015ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-2 என இழந்ததால், ராம்தின் நீக்கப்பட்டு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசியாக டிச. 6, 2019ல் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் (ஐதராபாத்) விளையாடிய ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தேசிய அணிக்காக 74 டெஸ்டில் 2898 ரன் (அதிகம் 166, சராசரி 25.87, சதம் 4, அரை சதம் 15), 139 ஒருநாள் போட்டியில் 2200 ரன் (அதிகம் 169, சராசரி 25.00, சதம் 2, அரை சதம் 8) மற்றும் 71 டி20ல் 636 ரன் (அதிகம் 55*, சராசரி 18.70) எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக மொத்தம் 429 கேட்ச் மற்றும் 39 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Related Stories: