×

லக்கேஜ் பெட்டி வாடகைக்கு விடும் திட்டம்: எஸ்இடிசி பஸ்களில் கூடுதல் வழித்தடங்கள் இணைப்பு குறித்து ஆலோசனை: போக்குவரத்து உயர் அதிகாரி தகவல்

சென்னை: எஸ்இடிசி பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகளை வாடகைக்கு விடும் திட்டத்தில் கூடுதலாக எந்தெந்த வழித்தடங்களை இணைக்கலாம் என்பது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக 1,110க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சமீபத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘அரசு விரைவு போக்குவரத்துக்கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்திபெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்ப ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.  

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம்.சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள விரைவுப் போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

 இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக 1,110க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவை தமிழகம் மட்டும் அல்லாது அருகாமையில் உள்ள மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பேருந்து சேவையை வழங்கி வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் ஒரு லக்கேஜ் பேட்டி உள்ளது. இதனை வாடகைக்கு விடும் திட்டம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற வழிகளிலும் விரிவுபடுத்தப்படும். அவ்வாறு எந்தெந்த வழித்தடங்களில் லக்கேஜ் பகுதிகளை வாடகைக்கு விடுவது என்பது குறித்து, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.



Tags : Luggage Box Hiring Scheme: Consultation on Additional Route Connections in SETC Buses: Information from Senior Transport Officer
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...