குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றிய அரசு குழு அமைப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. அதனால் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட மற்ற பிற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், வேளாண் சட்டம் ரத்து செய்து 8 மாதங்களுக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு நேற்று குழு அமைத்துள்ளது. இதில் முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநில அதிகாரிகளும், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்தா கிசான் மோர்சா சங்க உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் கூடி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான ஆலோசனை நடத்தும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: