×

ரூ.94 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேல் துறைமுகத்தை வாங்கிய அதானி குழுமம்: ஐரோப்பாவில் கால் பதிக்க திட்டம்

ஜெருசேலம்: இஸ்ரேலின் 2-வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை ரூ.94 ஆயிரம்  கோடி ஒப்பந்த விலைக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது. இந்தியாவை சேர்ந்த  அதானி குழுமம் பல விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அதானி குழுமம் கைப்பற்றி அதனை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதன் கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் தனது வர்த்தகச் சேவையை வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. அந்தவகையில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த துறைமுகத்தை ரூ.94 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேலின் காடெட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அதானி குழுமம் வாங்கி உள்ளது.

ஹைபா துறைமுகத்தை 2054ம் ஆண்டுவரை அதானி மற்றும் காடெட் குழுமம் நடத்துவதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதன் மூலம் இறக்குமதிச் செலவு குறையும், துறைமுகத்தில் நீண்டகாலம் கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதன் அடிப்படையில் ஹைபா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகள் அதானியிடமும், 30 சதவீதம் காடெட் நிறுவனத்திடமும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஹைபா துறைமுகத்தை சீனாவின் ஷாங்காய் சர்வதேச துறைமுக குழுமம் நடத்தி வந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் கொண்ட ஐ2 யு2  உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட்டும் பங்கேற்றனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் இந்த துறைமுக ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
இந்தியாவில் 13 துறைமுகங்களை இயக்கி வரும் அதானி குழுமம் கடல்சார் வர்த்தகத்தில் 24 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதானிக்கு  மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் எதுவும் இல்லை. இஸ்ரேல் துறைமுகத்தை கைப்பற்றி உள்ளதன் மூலம் ஐரோப்பாவில் கால் பதிக்க முடியும் என அதானி நினைக்கிறார் என்று இஸ்ரேல் நாளிதழ் தெரிவித்துள்ளது.


Tags : Adani Group ,Israel ,Europe , Adani Group buys Israel port for Rs 94 thousand crore: plan to set foot in Europe
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...