பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோக வெற்றி: பிரதமர் ஷெபாஸ் அதிர்ச்சி

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது பஞ்சாப் மாகாணம். ஆளும் முஸ்லிம் லீக் நவாப் கட்சியின் கோட்டையான இங்கு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் 15 இடங்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்) நவாஸ் கட்சி 4 இடங்கள், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆளும் பிஎம்எல் நவாப் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளதால், தற்போது முதல்வராக இருக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் மகன் ஹம்சா ஷெரிப் பதவி இழக்க நேரிடும். இது பிஎம்எல் நவாப் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. விரைவில் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவால் பிரதமர் ஷெபாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில், இம்ரான் கான் தனது டிவிட்டர் பதிவு மூலமாக, விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: