கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவியின் இறப்பில் அரசியல் வேண்டாம்: பள்ளிக் கல்வி அமைச்சர் வேண்டுகோள்

சென்னை:  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறப்பு சம்பவத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் தனியார் பள்ளி மாணவிய இறந்த சம்பவத்தை அடுத்து சின்னசேலத்தில் அந்த பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் இறங்கி பள்ளியில் புகுந்து தாக்கி அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் பள்ளிக்கு பல லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது. மாணவி இறந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியை தாக்கி சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டு தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பினர் 18ம் தேதி  ஒரு நாள் பள்ளியை மூடுவது என்றும், அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்களை சந்தித்து தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும், பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டு 18ம் தேதி  மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர்.

அதனால் 18ம் தேதி  பள்ளிகள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளிகளை மூடக்கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.இருப்பினும்  987 தனியார் பள்ளிகள் நேற்று  இயங்கவில்லை. இதற்கிடையே, தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேற்று காலை  தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசி, தங்கள் தரப்பு கோரிக்கையை தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த பள்ளிக் கல்வி அமைச்சர் பேசும்போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பள்ளியில் படித்த மாணவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் இது போன்ற மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க கவுன்சலிங் கொடுக்கப்படும். கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: