போக்குவரத்து கழகத்துக்கு டிரைவர்களை அரசு நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து கழகத்துக்கு ஓட்டுநர்களை அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களில் நிர்வாகமே நேரடியாக தேர்வு செய்யாமல் தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திட டெண்டர் விடப்படுவது தனியார் மயமாக்குதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும். போக்குவரத்து பணியாளர்களை தேர்வு செய்ய டெண்டர் பணிகளை மேற்கொண்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. அதோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் பணிக்காக காத்திருக்கும் ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் தேர்வு செய்வதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மயமாக்கும் போக்குவரத்து நிர்வாகத்தின் நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் அரசே நேரடியாக பணிநியமனங்கள் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: