×

ஜெய்பீம் பட காட்சி விவகாரம் நடிகர் சூர்யா மீதான வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா  உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில்,   ஒரு  சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தும்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 டிசம்பர் 8ல் மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளது.  வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Suriya ,Jaibheem , No strict action should be taken against actor Suriya in the case of Jaibheem's film scene: Court orders the police
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...