×

75வது ஆண்டு சுதந்திர தின நிறைவையொட்டி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில கட்டுரை போட்டி: ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, தமிழகத்தில் பயிலும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை ஆங்கிலம், தமிழில் நடத்துவதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ-மாணவிகள் பள்ளி அளவிலும் கல்லூரி-பல்கலைக்கழகங்களில் பயில்வோரும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டி நடத்தப்படும்.

பள்ளி மாணவ-மாணவிகள், நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை தீட்ட வேண்டும். 10 பக்கங்களுக்கு (ஏ4 தாள்) மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் கட்டுரை அமைந்திட வேண்டும். 2047ல் இந்தியா என்ற தலைப்பில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கட்டுரை தீட்ட வேண்டும். இந்த கட்டுரைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 6 மணிக்குள்ளாக அனுப்ப வேண்டும். கட்டுரைகளை அனுப்பும் போது, பெயர், வீட்டு முகவரி, வகுப்பு அல்லது பாடப் பிரிவு போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும், பயிலும் கல்வி நிறுவனத்தின் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் நடுவர்களாக இருப்பர். ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று வெற்றியாளர்களை நடுவர் குழுவினர் தேர்வு செய்வர். கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ -மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பரிசுத் தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். கட்டுரைகளை, தமிழ் கட்டுரைகள்  இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை-600100 என்ற முகவரிக்கும், ஆங்கிலத்திலான கட்டுரைகள் துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்,ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 75th Independence Day ,Governor RN ,Ravi , Tamil, English Essay Competition for School-College Students on 75th Independence Day: Governor RN Ravi Invites
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!