×

முதல்வர் நிதி ஒதுக்கீடு தரமணி திரைப்பட நகரம் உலக தரத்தில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் தலைவர்களின் படத்திறப்பு விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் எம்.பி.சாமிநாதன் படங்களை திறந்து வைத்து பேசியதாவது: கொரோனா தொற்றால் நலிவுற்ற தொழில்களில் திரைப்பட தொழிலும் ஒன்று. முன்னாள் முதல்வர் கலைஞர் சினிமாவை கண்ணாக, இதயமாக நேசித்தார். இப்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் சினிமாவை நேசிக்கிறார். அவரது மகன் உதயநிதி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இங்கு என்னிடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து, அரசின் நிதிநிலைக்கு ஏற்ப என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்ற முடியும் என்பது பற்றி யோசிப்போம். நிதி தேவைப்படாத அனுமதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், ராஜாஜி ஹால் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். தரமணி திரைப்பட நகரம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான திட்டம் தயாரிக்க முதற்கட்டமாக 10 லட்ச ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு சங்க தலைவர் என்.ராமசாமி (எ) முரளி ராமநாராயணன் தலைமை தாங்கினார். கவுரவ செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், துணை தலைவர் எஸ்.கதிரேசன், முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, கே.முரளிதரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, பிரசாத், பிலிம்சேம்பர் தலைவர் காட்ரகட்ட பிரசாத், தெலுங்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கல்யாண், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,Taramani Film City , Chief Minister's Fund Allocation Taramani Film City will be upgraded to world class: Minister Information
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...