×

காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே மந்தகதியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணி: விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி மந்தகதியில் நடந்து வருவதால், தொடர்நத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் சாலை 7 மீட்டர் அகலம் உள்ள சாலையாக இருந்தது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகரித்ததை தொடர்ந்து 10 மீட்டர் அகலம் உள்ள சாலையாக மாற்றப்படுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக, சாலையில் பள்ளங்கள் போடப்பட்டு அதன் மீது மண் கொட்டப்பட்டுள்ளது. ஆங்காங்கே மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டு பாலங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்ட இடத்தில் பாதைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் சறுக்கி விழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த சாலை வழியாகவே அரக்கோணம் சென்று அங்கிருந்து திருப்பதி, திருத்தணி கோயில்களுக்கு செல்கின்றனர். மேலும் கூரம், ஈஞ்சம்பாக்கம், சேந்தமங்கலம், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் இந்த சாலை வழியாக காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இதனால், இந்த சாலையில் வாகன நெருக்கமும் அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் இந்தச் சாலை விரிவாக்கம் நடைபெற்று வருவதால் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. இதனால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kanchipuram ,Arakkonam ,Mandakathi , Road widening work going on between Kanchipuram - Arakkonam at Mandakathi: Motorists demand speedy completion
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...