×

திருத்தணியில் மக்கும் மக்காத குப்பைகளை அகற்ற 3 பேட்டரி வாகனங்கள்

திருத்தணி: மக்கும் மக்காத குப்பைகளை அகற்ற 3 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பிரசித்திபெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், பழமையான புராதன திரவுபதி அம்மன் கோயில், காந்திரோடு திரவுபதி அம்மன் கோயில், சுந்தரவிநாயகர் கோயில், நரசிம்ம சுவாமி கோவில், நகராட்சி அலுவலகம், ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் குடியிருப்புப் பகுதிகள் ஏராளமாக உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அகற்ற மூன்று சக்கர பேட்டரி வண்டிகள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கினார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 6 வண்டிகள் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது. இந்த வண்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திருத்தணி நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் அதற்கான சாவிகளை வழங்கி வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் கோபி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி என்.பூபதி, திருத்தணி நகர பொருளாளர் திருத்தணி வினோத்குமார், நகர்மன்ற துணை தலைவர் சாம்ராஜ், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Thiruthani , 3 battery vehicles to remove non-biodegradable waste in Thiruthani
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து