அமலாக்கத்துறை நாஜிக்கள் போல செயல்படுகிறது: கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

சென்னை: அமலாக்கத்துறை நாஜிக்கள் போல செயல்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்பி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு எம்பி  கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டுமானால், சட்டம் தெரிந்த வேட்பாளரான யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும். பாஜ அரசியல் சாசனத்தை சிதைக்கிறது. பள்ளி கூடத்தில் மாணவிகளுக்கு எதிரான விஷயங்கள் காலம் காலமாக நடந்து வருவதுதான். முன்பு வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டனர். இப்போது வெளியே வந்து விடுகிறது. அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் அல்லாத உளவியல் ஆலோசகர் ஒருவர் பள்ளிகளில் நியமிக்கப்பட வேண்டும்.

அமலாக்கத்துறை விசாரணையில்  நான்தான் பிரபலம். 20 முறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். எனவேதான் அடுத்த முறை அமலாக்கத்துறை விசாரணை நடந்தால் அதை நேரடி ஒளிபரப்பு பண்ண வேண்டும் என்று கூறியுள்ளேன். வெளியில் இருந்து பார்க்க அது பெரிதாக தெரியும். ஆனால்  முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால், மன உளைச்சல் கொடுத்து, நேரத்தை வீணடிக்க செய்வதற்குதான் அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது. ராகுல் காந்தியிடம் 5 நாள் விசாரித்ததைபோல, மன உளைச்சல் தருவதற்காக சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. அமலாக்கத்துறை நாஜிக்கள் போல செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: