கொடைக்கானலில் யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது: சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் யானை தந்தம் விற்க முயன்ற 8 பேரை கைது செய்து, சொகுசு கார் மற்றும் துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள், 1 நாட்டு துப்பாக்கி, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்கள் வத்தலக்குண்டு பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் (47), திருச்சூரை சேர்ந்த சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (29) என்பது தெரிந்தது. இதில் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்த தங்கதுரை மகன் சார்லஸ் என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுபற்றி கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்கப்படுகிறது, தந்தங்கள் விற்பது இது முதல் முறையா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: