×

தென் மாவட்ட வளர்ச்சிக்காக கிழக்கு கடற்கரை ரயில்வே திட்ட கனவு நிறைவேறுமா?: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த கோரிக்கை

நாகர்கோவில்: தென் மாவட்ட வளர்ச்சிக்காக கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டத்தை  நிறைவேற்ற தென் மாவட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில்குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது சுமார் 3852 கி.மீ அளவில் இருப்பு பாதை வழித்தடங்கள் உள்ளன. வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இரட்டை ரயில் பாதை பணிகள் கூட முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு ரயில்வே திட்டங்கள் கனவாகவே உள்ளது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டமும் இன்னும் சாத்தியப்படாத திட்டங்கள் வரிசையில் உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி - கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலை துவங்கிய 1914ம் ஆண்டு பாரி அன் கோ எனும் நிறுவனம் மூலம் குலசேகரன்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். அப்பாதையில் 18.7.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்கபட்டது.

திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச்சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்ததாக சொல்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கி போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இன்றி காணப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு புதிதாக இருப்புபாதை அமைக்க வேண்டும் என்று 6-8-1991 ம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய  ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜேஸ்வரன் கேள்வி எழுப்பினார். பின்னர் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருநாவுக்கரசர் அறந்தாங்கியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க 24-2-2000 அன்று கேள்வி எழுப்பியிருந்தார். இது ேபான்ற திட்டங்களுக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்க வில்லை.

கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது.

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்க ரூ. 879 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு சர்வே செய்யப்பட்டது.

இதே போல் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை ரயில் பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க ரூ.1,080 கோடி தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டணம், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும்.

பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். இதற்கு ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும்.

ஆனால் கிழக்கு கடற்கரை திட்டத்துக்கான ரேட் ஆப் ரிட்டன் குறைவாக உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.  இந்த வழி தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக அமையும்.

இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றபட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயன்பெறும். இந்த திட்டம் வரண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகவும் வரபிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தென்தமிழக எம்.பிக்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென் மாவட்ட வளர்ச்சிக்கு வேண்டி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதையை சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இதை ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : East ,Parliament , Will the dream of the East Coast Railway project for the development of the southern district come true?: A request to insist in Parliament
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...