×

திருச்சி காவிரியில் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம்: அம்மா மண்டபத்தில் குளிக்க தடை

திருச்சி: கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் உபரிநீர், காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை 42வது முறையாக நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக காவிரியில் உபரிநீர் 1.15 லட்சம் கன அடி வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்தார். மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளது.

மேலும் ஆடி மாதம் என்பதால் சமயபுரம் உள்ளிட்ட கோயிலுக்கு பக்தர்கள் காவிரியில் இறங்கி குளிக்கும்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் காவிரி கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டதுடன் காவிரி கரையோரத்தில் உள்ள படித்துறைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரங்கம் அம்மா மண்டபத்தில் விழா காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு குளித்து சாமி தரிசனம் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தற்போது காவிரியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்து அந்த பகுதியை தடுப்பு அரண் அமைத்து பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் அதிகளவில் செல்வதால் பொதுமக்களுக்கு இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றிலும் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நுங்கும் நுரையுடன் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் நேப்பியர் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், கொள்ளிடம் ஆற்றில் நுங்கும் நுரையுடன் செல்லும் தண்ணீரை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Amma Mandapam , Trichy Cauvery floods people fear: Bathing in Amma Mandapam banned
× RELATED ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி...