நாடு முழுவதும் நடைபெற்ற 16வது குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவு.: தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்படி எம்பிக்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தற்போது நடந்து முடிந்த நிலையில், தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி பேட்டி அளித்துள்ளார். அதாவது, நாட்டின் 16-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 727 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 736 வாக்காளர்களில், 730 பேர் வாக்களித்தனர்.

அதனையடுத்து பேசிய அவர், பல்வேறு மாநிலங்களின் உதவி தேர்தல் அதிகாரிகள் இன்று மாலையே சாலைகள் மற்றும் விமானங்கள் வழியாக சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளுடன் வரத் தொடங்குவார்கள். டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக எடுத்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி. மோடி கூறியுள்ளார்.

Related Stories: