×

மேச்சேரி அரசு பள்ளியில் இன்று பரபரப்பு... 3வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அமரம் நாச்சன்வளவை சேர்ந்த 16 வயதுடைய மாணவி, இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இன்று காலையில் மாணவி வழக்கம்போல பள்ளிக்கு வந்ததில் இருந்து வகுப்பறையில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். சகமாணவிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவிகள் அனைவரும் காலை நடந்த இறைவணக்கத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர். ஆனால் 16 வயது மாணவி செல்லாமல் வகுப்பறையிலேயே இருந்தார்.

பின்னர் பள்ளியின் 3வது மாடிக்கு சென்ற அவர், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், மாணவிகள், பலத்த காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்து மேச்சேரி டிஎஸ்பி விஜயகுமார், தாசில்தார் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில், ‘வாலிபர் ஒருவரை அந்த மாணவி காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் சித்தப்பா, அவரை பள்ளிக்கு செல்லக்கூடாது’ என தெரிவித்துள்ளார். இதனால் காதலனின் புகைப்படத்தை வைத்து கொண்டு அழுதபடியே மாணவி இருந்துள்ளார். இதனிடையே காதலை விட்டு விடுவதாகவும் தன்னை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் மாணவி கூறியதையடுத்து அவர் இன்று பள்ளிக்கு வந்ததும், பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Tags : Macheri Government School , Today in Mecherry Govt School, there is excitement...jumping from 3rd floor Plus 2 student commits suicide
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...