×

துணை ஜனாதிபதி தேர்தல் : பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கருக்கு அதிமுக முழு ஆதரவு : ஓ பன்னீர் செல்வம் ட்வீட்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன்  முடிகிறது. இதையொட்டி, புதிய துணை ஜனாதிபதிக்கான  தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது.  இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.  இதை சரத் பவார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா வரும் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல்  செய்ய உள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திரு.ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ல் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அம்மாநில முதல்வர் மம்தாவுடன் கடுமையான மோதல் போக்கை ஜெகதீப் தங்கர் கையாண்டு வந்தார். அரசு விவகாரங்களில் தலையிட்டார். இதனால், மம்தாவுக்கும் அவருக்கும் பொதுமேடைகளில் கூட பலமுறை நேரடி மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜ, மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு துணையாக ஜெகதீப் தங்கரும் இருந்து வருவதால், சர்ச்சைகளுக்கு ஆளானாவர். இவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கும்படி மம்தா தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், பாஜ.வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

* யார் இந்த தன்கர்?
ஜெக்தீப் தன்கர் 1951ம் ஆண்டு மே 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கித்தானா என்ற கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்த பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1989 முதல் 1991ம் ஆண்டு வரை ஜனதா தள எம்பி.யாக இருந்தார். 1993-98ம் ஆண்டு வரை ராஜஸ்தான் கிஷன்கர்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டார். 2019ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Tags : Vice ,election ,Rajag ,Jekadeep Thankar ,Panneer , Vice President, Election, BJP, Candidate, Jagadeep Thangar, AIADMK
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...