மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முதல் நாளிலேயே முடங்கிய மக்களவை, மாநிலங்களவை

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 14 நாட்கள் நடைபெறும் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசும், அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தயிர், அரிசி உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரி விதித்ததை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் முழக்கத்தால் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டார். அதேபோல எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதிம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நேரங்களிலேயே மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: