திரெளபதி முர்மு Vs யஷ்வந்த் சின்ஹா.. ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் வாக்களித்தனர்!!

சென்னை: இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்ய உள்ளனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வாக்களித்தனர். பிரதமர் மோடியை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் வாக்களித்தனர். தொடர்ந்து லோக்சபா உறுப்பினர்கள் 543 பேர், ராஜ்யசபா உறுப்பினர்கள் 233 பேர் தனித்தனியாக வாக்களித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் லக்னோவில் வாக்களித்தார். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் வகையில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள குழு கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். முதலமைச்சரை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி காலை நடைபெறுகிறது.புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் வரும் 25ம் தேதி பதவி ஏற்பார்.

Related Stories: